கடவுள் நானே என கூறிக் கொள்ளும் இளம் சாமியார் துஷ்டர்களை அழிக்கும் கதை...
அழகன் தமிழ்மணி மகன் ஆர்யா. ஜோதிடர்கள் ஆர்யா ஜாதகத்தால் குடும்பத்துக்கு ஆபத்து என பயமுறுத்த சிறு வயதிலேயே காசியில் அனாதையாக விடுகின்றனர்.
அங்கு தங்களை கடவுள் அவதாரமாக பாவிக்கும் சாமியார்களிடம் வேத மந்திரங்கள் படித்து வளர்கிறார். பற்றுகளை துறந்து முழு சாமியாகிறார்.
ஜோதிடர்கள் “கெடு” காலம் முடிந்து ஆர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் தமிழ்மணி. வீட்டில் தாய், தங்கை சொந்த பந்தங்களுடன் பழக மறுத்து விலகியே இருக்கிறார். அங்குள்ள மலைக்கோவில் ஒன்றில் தங்குகிறார்.
இன்னொருபுறம் வில்லன் தாண்டவன் சிறுவர், சிறுமி களை விலைக்கு வாங்கி பிச்சை எடுக்க வைக்கிறான். பார்வையிழந்த பூஜாவையும் கடத்தி பிச்சை எடுக்க பயன்படுத்துகிறான். எல்லோரையும் பாதாள அறைக்குள் அடைத்து சித்ரவதை செய்கிறான்.
முகம் கோரமான அருவெறுப்பான ஒருவன் தாண்டவனுக்கு நிறைய பணம் கொடுத்து பூஜாவை தனக்கு கட்டி வைக்க நிர்ப்பந்திக்கிறான். அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி ஆர்யா காலை பிடித்து காப்பாற்ற மன்றாடுகிறார். ஆர்யா ருத்ர தாண்டவத்தில் எதிரிகளை சின்னா பின்னமாவது கிளைமாக்ஸ்...
பக்தர்கள் வெள்ளம், கங்கையில் பிணங்கள் வீச்சு, சாமியார்கள் என காசியின் முழு பரிணாமத்தையும் விழிகளில் பிரமாண்டமாய் பதித்தபடி காட்சிகள் விரிகிறது. சாமியார்களின் தவ வலிமை, பிச்சை எடுப்பவர்களின் வலிகள் என கேமராக்கள் எட்டியாராத உயிரோட்டமான கதையை திரையில் செதுக்கியுள்ளார் இயக்குனர் பாலா.
கதாபாத்திரங்களில் கொஞ்சமும் சினிமா வாடை எழாமல் யதார்த்தம்.
நீண்ட தாடி, எலும்பு மண்டை ஓடு மாலை, மந்திரம், வசிய பார்வை, என காவி சாமியாராய் வாழ்கிறார் ஆர்யா. கங்கை நதியோரம் தீயவர்களை நொறுக்கி ஒருவனை தூக்கி பந்தாடி கீழே போட்டு அதே வேகத்தில் அவன் மேல் தவக்கோலத்தில் உட்காருவது அதிர்கிறது.
கொலை வழக்கில் கோர்ட்டில் நீதிபதியிடம் நானே பகவான். வாழ தகுதி இல்லாதவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பேன் என வாதம் செய்வது கம்பீரம்...
கிளைமாக்சில் பார்வையனாலே தாண்டவனின் கெடுதல்களை அளந்து ஓட ஓட விரட்டி சம்காரம் செய்வது விறு விறுப்பு...
பூஜா அசல் பார்வை இழந்த பெண்ணாக “ஸ்கோர்” பண்ணுகிறார். தாண்டவனிடம் சிக்கி அல்லோப்படுவது பரிதாபம்... இறுதியில் கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட சித்ரவதையில் இருந்து மீள என்னை கொன்று விடுங்கள் என ஆர்யாவிடம் கெஞ்சும்போது விழிகளில் நீர் கசிவு...
ஆர்யா, பூஜா போட்டி போட்டு விருதுக்குரிய நடிப்பை பிழிந்துள்ளனர். பிச்சை எடுப்போரை கண்காணிக்கும் வேடத்தில் வரும் கிருஷ்ணமூர்த்தி மனதாபிமானத்தில் மனதில் நிற்கிறார். பிச்சை எடுக்கும் சிறுவர்களும், சிரிப்பும், அழுகையுமாய் அழுத்தம்.
இளையராஜா இசையில் நர்த்தனம். பாடல்கள் மனதை வருடுகின்றன. ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு காசி அழகை அள்ளுகிறது. பிச்சை எடுப்பவர்களின் வலிகள் அக்குவேறு ஆணி வேறாய் அலசப்படுவது முகம் சுளிக்க வைக்கிறது. ஆர்யாவின் கேரக்டருக்கான தீனியும் குறைவு... ஏதோ நடந்து கொண்டே இருக்கிறார்.
0 comments:
Post a Comment