பொய் முகவரி கொடுத்து அறிமுகமாகும் இளம் பெண்ணுக்கும் வாலிபனுக்கும் நடக்கும் காதல் மோதல் கதை....
கொரியர் கம்பெனியில் வேலை செய்யும் சிவா கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் வரும் போது அழகான சக்தியை பார்த்து மனதை இழக்கிறான். அவளிடம் அந்த நொடியே பழகி விசாரிக்கிறான். தன்னை விமானப் பணிப்பெண் என அறிமுகம் செய்கிறாள். சிவாவும் பதிலுக்கு ராணுவ வீரராக இருப்பதாக சொல்கிறான்.
மறுதினம் சக்தி சொன்ன விமான கம்பெனிக்கு போய் தேடுகிறான். அப்படி யாரும் இல்லை என்கின்றனர். ஏமாற்றப்பட்டதால் கடுப்பாகிறான்.
ஹலோ எப்.எம். ரேடியோ அலுவலகத்துக்கு கொரியர் பார்சல் எடுத்து செல்கிறான். அங்கே சக்தி ஆர்.ஜே.வாக பணி செய்வது கண்டு அதிர்கிறான். இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றியதாக வசை பொழிகின்றனர். பிறகு சந்திக்கும் போதெல்லாம் மோதிக்கொள்கிறார்கள். இந்த தகராறையும் மீறி அடி மனதில் காதல் தீ பற்றுகிறது.
ஒரு கட்டத்தில் காதலை நாசூக்காய் வெளிப்படுத்தும் சக்தி, சிவாவின் குறும்பால் அவ மானப்படுகிறாள். கோபத்தில் அவனை விட்டு விலகுகிறாள். சிவா தவறை உணர்ந்து சக்தியை நெருங்குகிறான். சக்திக்கோ வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்...
குடி. கும்மாளம் என திரியும் லோக்கல் இளைஞனுக்கும் படித்த நாகரீக பெண்ணுக்கும் இடையிலான காதலை கலகலப்பு விறுவிறுப்பு என நகர்த்தியுள்ளார் இயக்குனர் ராஜேஷ் எம்.
சிவா கேரக்டரில் வெளுக்கிறார் ஜீவா. பொய் முகவரியில் காதலியை தேடி குடும்பத்துடன் போய் மாப்பிள்ளைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் ஷகிலாவிடம் சிக்கி தவிப்பது குபீர் சிரிப்பு...
காதலி முன் கொரியர் பையனாக மாட்டி நெளிவது.. உடனேயே அவள் பொய் சொன்னது ஞாபகம் வர வெடிப்பது ரகளை.
சக்தியை பழிவாங்க கொரியரில் மதுபாட்டில், சிகரெட் பாக்கெட்டுகளை வீட்டுக்கு அனுப்பி அவள் தந்தையிடம் மாட்ட வைப்பது... குடித்து விட்டு சக்தி அலுவலகத்துக்கு போய் சட்டையை கழற்றி பிழிந்து காயவைத்து விட்டு தகராறு செய்வது ஆரவார கலாட்டா...
டாஸ்மாக் பாரில் காசு இல்லாமல் குடித்து விட்டு சந்தானத்தை மாட்டி விடுவது கிளைமாக்சில் தப்பு பண்ணிட்டேன் என்று சக்தி குடும்பத்தினர் காலில் விழுவது... காமெடியிலும் கலக்க வரும் என நிரூபித்துள்ளார்.
சக்தியாக வரும் அனுயா அழகு, கோபம், திமிர், காதலின் கலவையாய் பளிச்சிடுகிறார். விமானப் பணிப்பெண் என பொய் சொன்னதோடு ஓசையை வைத்து ஆகாயத்தில் பறக்கும் விமானத்தின் பெயரை சொல்வது.... ஜீவா வீட்டுக்கு போய் தாய், தங்கையிடம் அவனை குடிகாரன் என மாட்டி விடுவது குறும்பு தனம். பாடலிலும் படுக்கையறையிலும் கவர்ச்சி... டாஸ்மாக் பாரில் குடிகாரர்களுக்கு மத்தியில் ஜீவாவிடம் காதலை வெளிப்படுத்துவது வித்தியாசம்.
சந்தானம் காமெடி தூள்.. புது செல்போன்கள் வாங்கி வருவதும் ஜீவா வால் அவை உடைக்கப்படுவதும் வயிறு நோக வைக்கும் சிரிப்பு.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் இனிமை. ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் காதல் தத்துவம்..
மூச்சு முட்ட வசனம் பேசியே காட்சிகள் நகர்வது நெருட வைத்தாலும் கதாபாத்திரங்களின் அழுத்தம் படத்தோடு ஒன்ற வைக்கிறது.
கல கல காதல்
0 comments:
Post a Comment