ஆவியை அழிக்கும் மறு ஜென்ம பெண் கதை...
கந்தர்வகோட்டை ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. சிறு வயதிலேயே வாள் சண்டை நடன கலையில் தேறுகிறாள். அவள் அக்காவை மணக்கும் பசுபதி சமஸ்தான சொத்தை அபகரிக்க முயல்கிறான். பெண்களை கடத்தி கற்பையும் சூறையாடுகிறான். அவன் கொடுமை தாங்காமல் அக்கா தூக்கில் தொங்கி இறக்கிறாள்.
ஆவேசமாகும் அருந்ததி பொது மக்கள் கையாலேயே அடித்து பசுபதியை சாகடிக்க உத்தரவிடுகிறாள். செத்து விட்டதாக அவனை காட்டுக்குள் போடுகின்றனர். அகோரர்கள் அவனை காப்பாற்றி விடுகின்றனர். அவர்களிடம் கடும் பயிற்சி எடுத்து அமானுஷ்யசக்தி கொண்டவனாக மாறுகிறான் பசுபதி.
வெறியோடு கந்தர்வ கோட்டை சமஸ்தானத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் அழிக்கிறான். அருந்ததியை கெடுக்க முயல்கிறான். எதிரிகளை வீழ்த்தும் நடன கலையால் அவனுடன் மோதி வீழ்த்துகிறாள். உயிரோடு அவனை சமாதியாக்குகிறாள். ஆனாலும் அவன் தீய சக்தி ஊரெங்கும் நோயை பரப்புகிறது. மறு பிறவி எடுத்து வந்து பசுபதியை அருந்ததி அழிப்பது கிளைமாக்ஸ்.
தெலுங்கில் இருந்து தமிழில் வந்திருக்கும் படம். பாழடைந்த பங்களா அதற்குள் பதுங்கும் ஆவி என ஆரம்பமே திகிலுட்டுகிறது. அருந்ததியை வரும் அனுஷ்கா சந்திரமுகியை நினைவூட்டுகிறார். மறுபிறவி எடுத்த அவரை பங்களாவுக்குள் சமாதியான ஆவி பழிவாங்க கந்தர்வகோட்டைக்கு வர வைப்பது திக் திக்... மனோரமா சொல்லும் கந்தர்வகோட்டை பிளாஸ் பேக் கதை பரபர... நடனமாடி பசுபதியை அனுஷ்கா வெட்டி சாய்ப்பது... அவனை அழிக்க வரம் வேண்டி முனிவர்களை தேடி அலைவது... மறு பிறவி மூலம்தான் விழ்த்த முடியும் என அறிந்ததும் தலையில் தேங்காய்களை அடிக்க வைத்து மண்டை உடைந்து சாவது.. விறுவிறு சீன்கள்....
சமாதியில் இருந்து வெளி வரும் ஆவி செய்யும் அட்டகாசங்கள் திகிலுட்டுகிறது. ஆவியை அனுஷ்கா அழிக்கும் கிளைமாக்ஸ் மிரள வைக்கிறது.
ஆவி பசுபதியாக வரும் சோனு சூட் மிரட்டுகிறார். பேய் விரட்டும் முஸ்லிம் பெரியவராக வரும் சாயாஜி ஷிண்டே அழுத்தம்.
வரலாற்று கால கதையை இக்கால கட்டத்துடன் இணைத்து அனல் பறக்க படமாக்கிய இயக்குனர் தோடி ராமகிருஷ்ணா திறமை பளிச்சிடுகிறது. கோட்டியின் பின்னணி இசை, கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு பலம் சேர்கின்றன.
0 comments:
Post a Comment